சீனாவில் அதிதீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு 106 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனா தவிர ஆஸதிரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஹாங்கொங், ஜப்பான், தாயலாந்து, தென் கொரியா, நேபாளம்,தைவான், கனடா, ஜெர்மனி மற்றும் வியட்நாம் உட்பட சுமார் 18 நாடுகளில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் கேரளா உட்பட 04 மாநிலங்களில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் 11 நபர் தொடர்பில் விழிப்புடன் இருப்பதாக அந்நாட்டு ஊடக செய்திகள் வெளியிட்டுள்ளது. அதோடு புதிய கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சீனப் பெண் ஒருவர் பரிசோதனைக்காக கொழும்பில் ஐ.டி.எச் மருத்துவமனையில் அநுமதிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
காய்ச்சல், இருமல், ஜலதோசம், மூச்சுத்திணரல், மலச்சிக்கல், தலைவலி, தொண்டைப்புண், மற்றும் உடல் வலி ஆகியவை புதிய கொடிய கொரோனா வைரஸின் அறிகுறிகளாகும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா, மூச்சுத்திணரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளல் வேண்டும். புதிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தொற்றுள்ளவர்களின் தொடர்பைத் தவிரத்தல், உணவு சமைக்கும் போது, சாப்பிடும் முன், கழிப்பறைகளைப் பயன்படுத்தியதன்பின், செல்லப்பிராணிகளின் அழுக்குகளைத் தொட்டதன்பின் கைகளை சவர்க்காரமிட்டு அல்லது கிருமி நாசினித் திரவங்களைப் பயண்படுத்தி கழுவுதல் வேண்டும். இருமல் மற்றும் தும்மும் போது கைக்குட்டை அல்லது திசுவைப் பயண்படுத்துவதோடு அவை இல்லாதவிடத்து கையின் உட்புறம் அல்லது மேல் கையைப் பயன்படுத்தவும். அதோடு பயன்படுத்தப்பட்ட திசுக்களை முறையாக அகற்றவும். உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் வந்;தால் அது பரவாமல் இருக்க கைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்வதுடன் முககவசம் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தவிர்த்துக்ககொள்ள முடியூம் எனவும் வைத்தியக் குழு உபதேசம் வழங்கியுள்ளனர். புதிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு காய்ச்சல் மற்றும் ஜலதோசம் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை தவிர்ப்பதுடன் மேலும் அவர்களிடம் தொடர்புகொள்ளவேண்டி ஏற்படின் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்த்துக்கொள்ளும் படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. உணவுக்காக தயாரிக்கப்படும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக சமைத்துக்கொள்ளல் வேண்டும். விலங்குப் பண்ணைகள் அல்லது அதனுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுவோர் முக கவசம் மற்றும் கையுறைகளைப் பயன்படுத்தல் வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நீங்கள் கால்நடைப்பண்ணையில் அல்லது அதனுடன் தொடர்புடைய வேலைகளில் ஈடுபடுபவர்களாக இருந்தால் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பிறகும் கைகளை சவர்க்காரம் அல்லது கிருமி நாசினி திரவங்களைப் பயன்படுத்தி கழுவிக்கொள்வது மிக முக்கியமாகும். புதிய கொரோனா வைரஸ்அபாயத்தைத் தவிர்க்க பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.